Day – 01 | Introduction – Am
ஆங்கிலத்தில் நன்றாகப் பேச வேண்டுமெனில் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது நிறைய வார்த்தைகளை படித்து நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன்…..
“அவள் கூட வேலை செய்பவருடன் ஓடிவிட்டாள்”. இப்பொழுது உங்களுக்கு இந்த வாக்கியத்தை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும். ஆனால் உங்களுக்கு தெரிந்த ஒரு வார்த்தை அவள் (she) ஒரு சிலருக்கு கூட வேலை செய்பவர் (colleague) என்பது தெரியும் ஆனால் பலருக்கு ஓடிப் போய்விட்டாள் (அதாவது வீட்டுக்கு தெரியாமல் திருமணத்திற்க்காக) என்பதற்கு ஆங்கிலத்தில் சொல்ல தெரியாது. இப்போது அதற்கு உண்டான ஆங்கில வார்த்தை தெரியாதவரை நீங்கள் இந்த வாக்கியத்தை உருவாக்க முடியாது, அதற்கு தான் எப்போதும் நிறைய வார்த்தைகளை (Vocabularies) கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் அப்போதுதான் உங்களுக்கு ஆங்கிலத்தில் வாக்கியத்தை அமைப்பதற்கும் பேசுவதற்கும் எளிதாக அமையும்.
She eloped with a colleague
அவள் ஒரு சக ஊழியருடன் ஓடிப்போனாள்.
இங்கு என்ற elope வார்த்தை தெரிந்தால் மட்டுமே உங்களுக்களால் ஈசியாக வாக்கியத்தை அமைக்க முடியும்.
elope - உங்கள் பெற்றோரின் அனுமதியின்றி திருமணம் செய்து கொள்வதற்காக ரகசியமாக வீட்டை விட்டு வெளியேறு
“என்னடா…. எடுத்தவுடனே இப்படி ஓடிப்போவது பற்றி பேசுகிறீர்கள்” என்று நீங்கள் நினைக்கிறீர்களா… ஒருவர் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டால் அதன் பிறகு நடக்கும் அனைத்து விஷயங்களையும் அதை வைத்து தான் கேட்பார்கள்
உதாரணமாக உங்கள் பாட்டி இறந்துபோனது
”நீ ஓடிப் போவதற்கு முன்பாக இல்லை பின்பா”
”நீ ஸ்கூட்டர் வாங்கியது ஓடிப் போவதற்கு முன்பாக இல்லை பின்பா”
இப்படி எந்த கேள்வி கேட்பதாக இருந்தாலும் அதை ஒரு காலத்தில் செய்த செயல் வைத்து தான் கேட்பார்கள், ஏனென்றால் அந்த காலம் தான் அவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும், அதுபோல தான் ஞாபகப் படுத்திக் கொள்வதற்காக இப்படி ஒரு பாடத்தை ஆரம்பித்திருக்கிறேன்.
உங்களுக்கு மனதில் எளிதில் பதிவதற்க்காக இந்த பாடதிட்டதில் பல இடங்களில் கதை வடிவிலும் ஆங்கிலத்தை கற்றுக் கொடுக்கிறோம்.
ஓடுதல் என்பது ஒரு செயல், அதுதான் அவள் செய்த செயல், நீங்கள் செய்யக்கூடிய செயல்கள் அனைத்தும் வினைச்சொல் (verb) வைத்தான் வாக்கியத்தை அமைக்க முடியும் ஆதலால் அதிகப்படியான verbs களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
அந்த வினைச்சொல் (verb) எந்த காலத்தைக் குறிக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அவள் ஓடி விட்டாள் என்பது கடந்த காலத்தைக் குறிக்கின்றது இப்பொழுது அந்த வினைச்சொல் கடந்தகாலத்தில் குறிப்பது போல நாம் வாக்கியத்தை அமைக்க வேண்டும். ஒவ்வொரு verb-ம் ஐந்து வகைகளைக் கொண்டு இருக்கும் அவை பின்வருமாறு.
- Base/root
- third-person singular
- Present Participle
- Past
- Past participle
உதாரணமாக
go என்ற வினைச்சொல்லை எடுத்துக் கொள்வோம், அதன் 5 வகைகள் பின்வருமாறு
go – Base/root
goes – third-person singular
going – Present Participle
went – Past
gone – Past participle
- Go back – பின்னால் போ
- She goes to the gym in the morning
அவள் காலையில் ஜிம்மிற்கு செல்கிறாள்
- I am going to the cinema tonight
நான் இன்றிரவு சினிமாவுக்குச் செல்கிறேன்
- They went at about nine o’clock.
அவர்கள் சுமார் ஒன்பது மணிக்கு சென்றனர்.
- Ramu has gone on leave for two weeks.
ராமு இரண்டு வாரங்களாக விடுப்பில் சென்றுள்ளார்.
மேற்கண்ட வாக்கியங்களில் Bold எழுத்துக்களில் உள்ள வினைச்சொல் ஒவ்வொன்றும் ஐந்து நிலைகளில் ஏதேனும் ஒன்றைக் குறிக்கின்றது.
இவைகளைப் பற்றி இன்னும் விரிவாக பின்வரும் பாடங்களில் பார்க்க இருக்கின்றோம்.
மேலும் ஒர் உதாரணம்……
”அவளிடம் ஒரு கார் இருக்கிறது” என்று நீங்கள் ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமெனில் அதற்கு தேவையான வினைச்சொல் (verb) முதலில் தெரிந்து இருக்க வேண்டும். உங்களுக்கு தெரிந்த வார்த்தைகள் அவள் (she) கார் (car) என்பது மட்டுமே. ஆனால் ”அவள் ஒரு கார் வைத்திருக்கிறாள்” என்று சொல்ல வேண்டுமெனில் பெற்றிருப்பது அல்லது வைத்திருப்பதிற்குண்டான ஆங்கில வார்த்தை (have/has) தெரிந்திருக்க வேண்டும் அப்போதுதான் உங்களால் அந்த வாக்கியத்தை உருவாக்க முடியும்.
ஆனால் இந்த have/has இவற்றில் எதை பயன்படுத்துவது என்பது கேள்விக்குறியாகும்.
She have a car
She has a car
இவற்றில் எது சரியான வாக்கியம்? ஆனால் ஒரு சிலரோ ஒருபடி மேலே போய் ஏன் “She is a car” என்று இப்படி சொல்லக்கூடாதா என கேட்பார். இது தவறு.
இதற்கு சரியான விடை She has a car என்பதே ஆகும்.
He, she, it and third person singular (subjects) போன்ற முன்றாவது நபர் ஒருமைகளுக்கு has தான் பயன்படுத்தவேண்டும். மற்ற plural subjects களுக்கு have பயன்படுத்தவேண்டும்.
இப்போது என்ன புதிதாக சப்ஜெக்ட் என்று ஒரு வார்த்தை சொல்கிறேன் என்று நினைக்கிறீர்களா, ஆம் நாம் யாரைப் பற்றி பேசுகிறோமோ அதுதான் சப்ஜெக்ட் (subject) ஆகும். இப்பொழுது நாம் அவளைப் பற்றி பேசுகிறோம் அதாவது அவளிடம் ஒரு கார் இருக்கிறது (Sha has a car) என்று சொல்கிறோம். இங்கு She ஒரு சப்ஜெக்ட் ஆகும். அந்த சப்ஜெக்ட் பற்றி என்ன பேசிகிறோமோ அது தான் predicate ஆகும். அதாவது subject யைப் பற்றி நாம் கணித்து சொல்வது தான் predicate ஆகும்.
”அவர்கள் ஒரு கார் வைத்திருக்கிறார்கள்” என்பதை நீங்கள் எப்படி ஆங்கிலத்தில் சொல்வீர்கள்?
They have a car.
எதைப்பற்றி அல்லது யாரைப் பற்றி பேசுகிறோமா அதுதான் சப்ஜெக்ட் ஆகும். இப்போது மேலும் சில சப்ஜெக்ட்களைப் பார்ப்போம், பொதுவாக சப்ஜெக்ட்கள் அனைத்தும் Noun (பெயர்ச்சொல்) ஆகும்.
பெயர்ச்சொல் (Noun) என்பது என்பது ஒரு நபர், இடம், ஒரு பொருள் ஆகியவற்றை அடையாளம் காணும் ஒரு சொல்லாகும்.
Here are some examples:
Person: | man, woman, teacher, Ramya, Prakash |
Place: | home, office, town, lake, London |
Thing: | table, car, banana, money, song, love, cat, mobile |
இப்பொழுது மீனாவைப் பற்றி சொல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
மீனா வந்து விட்டாள்.
மீனா சாப்பிட்டு விட்டாள்.
மீனா இப்பொழுது தூங்குகிறாள்.
அல்லது
மீனா வந்து விட்டாள்,
அவள் சாப்பிட்டு விட்டாள்,
அவள் இப்பொழுது தூங்குகிறாள்.
மேற்கண்ட தமிழ் வாக்கியங்களில் நீங்கள் எதை வழக்கமாக சொல்வீர்கள்? ஒவ்வொரு முறையும் மீனா என்ற பெயரை உச்சரிப்பார்களா?
இல்லை ஒரு முறை மட்டும் மீனா என்ற பெயரை சொல்லிவிட்டு அடுத்த முறை அவள் என்ற வார்த்தையை பயன்படுத்துவீர்களா?
கண்டிப்பாக ஒருமுறை மட்டுமே மீனா என்ற பெயரை பயன்படுத்துகிறார்கள் அதன் பிறகு அவள் என்ற வார்த்தையை மட்டுமே பயன்படுத்துவீர்கள் சரிதானே?
அதேபோலதான் ஆங்கிலத்திலும் ஒவ்வொரு முறையும் பெயரை உச்சரிப்பதற்கு பதில் she (அவள்) என்பதை பயன்படுத்துகிறோம் இதுதான் pronoun (பிரதிப் பெயர்) ஆகும். அது பெயர்ச் சொல்லுக்கு பதிலாக பயன்படுத்துவது, மறுபடியும் மீனா என்ற பெயருக்கு பதிலாக she என்ற வார்த்தையை பயன்படுத்துவது போல ஆகும். இளம் சில பிரதி பெயர்ச்சொல்லை பார்ப்போம்.
I (நான்), We (நாம்), You (நீ, நீங்கள்), He (அவன்), She (அவள்), It (அது), They (அவர்கள்)
இவற்றில்……
(singular) ஒருமை | (plural) பன்மை | |
1st person | I | We |
2nd person | You | You |
3rd person | He, she, it | They |
இப்பொழுது நீங்கள் மீனாவைப்பற்றி மேலும் சொல்ல விரும்புகிறீர்கள்,
உதாரணமாக
“மீனா ஒரு ஆசிரியர்“
உங்களுக்கு ஆசிரியர் என்றால் teacher என்று ஆங்கிலத்தில் தெரியும், மீனா ஒரு பெயர்ச்சொல் இப்பொழுது வாக்கியத்தை அமைக்க
Meena teacher என்று சொன்னால் அது சரியான வாக்கியமாக தோன்றவில்லை.
மீனா ஒரு ஆசிரியர், என்றால் தமிழில் மீனா ஒரு ஆசிரியராக இருக்கிறார் என்று அர்த்தமாக கருதுகிறோம்.
“இருக்கிறார்” என்று சொல்வதற்கு ஆங்கிலத்தில் “is” என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.
Meena is teacher. ஆனாலும் தமிழில் நாம் ஒரு என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கிறோம், அதாவது மீனா ஒரு ஆசிரியராக இருக்கிறார். இது போல ஆங்கிலத்தில் சொல்ல…
Meena is a teacher. இப்பொழுது நாம் சரியான வாக்கியத்தை அமைத்து விட்டோம். அதாவது நிகழ்காலத்தில் மீனா ஒரு ஆசிரியராக இருக்கிறார் அவர் ஒருவர் அதாவது ஒருமை(singular) அதனால் is பயன்படுத்துகிறோம் அதுவே “நீங்கள் மாணவர்கள்” என்று ஆங்கிலத்தில் சொல்லவேண்டுமெனில்
You are students. அதாவது நீங்கள் அனைவரும் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் பன்மையில்(plural) சொல்லவேண்டும் ஆங்கிலத்தில் plural-ல் சொல்ல are பயன்படுத்த வேண்டும்.
ஆனால் உங்கள் எதிரில் ஒரு மாணவர் தான் இருந்தால் இப்படி சொல்லலாம்,
You are a student.
நீங்கள் ஒரு மாணவர்
❌ You are a students இது தவறு, காரணம் Students என்ற plural வார்த்தை இருக்கும்பொழுது a பயன்படுத்தக் கூடாது.
You are an engineer
நீங்கள் ஒரு பொறியாளர்
இதுவரை நீங்கள் a (ஒரு) என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தினோம் இப்பொழுது என்ன புதிதாக an இதனைப் பயன்படுத்துகிறோம் என்று நினைக்கிறீர்களா?
a/an இரண்டுக்கும் ஒரே அர்த்தம் தான் ஒரு ஆகும்.
ஆனால் a, e, i, o and u இந்த உயிர் எழுத்துக்களின் ஒலி வடிவத்தை கொண்டு ஆரம்பிக்கும் வார்த்தைகளை an கொண்டு பயன்படுத்த வேண்டும்.
உதாரணமாக
- An hour
- An enemy
- An umbrella
- An honest man
இதைப் பற்றி மேலும் விரிவாக பின்வரும் பாடங்களில் பார்ப்போம்.
இப்பொழுது உங்களைப் பற்றி சொல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அப்பொழுது is/are பயன்படுத்தக்கூடாது அதற்கு பதில் am பயன்படுத்த வேண்டும்.
உதாரணமாக
- I am a doctor
- I am an engineer
- I am a student
Subjects பன்மையில் (plural) இருந்தால் நிகழ்கால வாக்கியத்தில் எப்பொழுதும் are பயன்படுத்த வேண்டும்.
மேலும் சில உதாரணங்களைப் பார்ப்போம்.
❌ We are doctor.
✔ We are doctors.
நாங்கள் மருத்துவர்கள்
❌ Those are my book.
✔ Those are my books.
அவை எனது புத்தகங்கள்.
They are in the class.
அவர்கள் வகுப்பில் இருக்கிறார்கள்.
My friend is good looking.
என் நண்பர் அழகாக இருக்கிறார்.
My friends are good looking.
என் நண்பர்கள் அழகாக இருக்கிறார்கள்
Meena and Ramya are pretty girls.
மீனாவும் ரம்யாவும் அழகான பெண்கள்.
His shoes are new.
அவரது காலணிகள் புதியவை.
Our next-door neighbours are very noisy.
எங்கள் பக்கத்து வீட்டுகாரர்கள் மிகவும் சத்தமாக இருக்கிறார்கள்.